12 February 2006

கர்ணனை மயக்கும் பசப்புக்காரி பாஞ்சாலி!

குழலியின் இந்த அருமையான காலத்திற்கேற்ற பதிவைப் படித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தினகரனில் இன்று காலை(பிப்.12 ஆம் நாள்) வெளிவந்திருக்கும் கலைஞரின் அட்டகாசமான 'உடன்பிறப்புக்குக் கடித'த்தையும் படிக்க நேரிட்டது!

'மாபாரதம்தான்' இவ்விரு பதிவுகளின் உள்ளீட்டின் களமாக இருக்கிறது என்றாலும் எத்துணை பொருத்தம்!

கலைஞரின் எழுத்தின் வீச்சு எப்போதும் போல - அதே அபார புனைவுத்திறனுடன் - அதிவேகப் புரவியாய்ப் பாய்ந்து வருகிறது!!... கலைஞரின் அந்தக் கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் :)

-----------------------------------------------------------------------------------


தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உடன்பிறப்பே, இரவு நேரம் - இரண்டு மணி! எழுதிக் கொண்டிருக்கும்போதே; உறக்கம் கண்களைத் தழுவியது- அரைத் தூக்கத்தில் ஒரு கனவு- அந்தக் கனவையும் அதனை யொட்டிய நிகழ்வையும்; இதோ உனக்கும் தெரிவிக்கிறேன். அதாவது;

அஸ்தினாபுரத்துக்கு அங்க தேச அதிபதி கர்ணன் விருந்தினனாக வந்தவன் மதிய உணவுக்குப் பிறகு, களைப்பு மிகுதியால் சற்று கண்ணயர்ந்து விடுகிறான்- அவன் காதோரம் சாய்ந்தும்-தோள் பட்டையில் படிந்தும் இருக்கிற "செல்போன்" சற்று சத்தமாகச் சிணுங்குகிறது.

தூக்கக் கலக்கத்திலேயே செல்போனில் பேசும் விசையை அமுக்கி, கர்ணன் "அலோ" என்கிறான்.

மறுமுனையிலிருந்து ஒலி கேட்கிறது-

ஒலி:- நான் சகாதேவன் பேசுகிறேன்
கர்ணன்:-எந்த சகாதேவன்? (வியப்புடன்) இ.ஆர்.சகாதேவனா? பூலித் தேவன் நாடகத்தில் பூலித் தேவனாக நடித்த சகாதேவன்தானே?

ஒலி:- இல்லையண்ணா-நான் பாண்டவர்களில் ஒருவன்-நகுலனுக்கும் இளையவன்-சகாதேவன்; பாண்டுவின் கடைசி மகன் அண்ணா!

கர்ணன்: -அண்ணனா? நான் எப்படி உனக்கு அண்ணனாக முடியும்?

சகாதேவன்: -சத்தியமாக நான் உன் சகோதரன்தான் அண்ணா! அம்மா குந்தி தேவி உன்னைப் பார்க்க வந்தார்களே-உண்மையைச் சொல்லியிருப்பார்களே! குந்தி தேவியின் பிள்ளையல்லவா நீ?

கர்ணன்:- அடடர் தாய் பிள்ளை- அம்மா மகன் சொந்த பந்தமெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறதா? யுத்தம் என்றதும் என் தயவு தேவைப்படுகிறது- அன்றைக்கு என்னை சொந்த சகோதரனாக பாவித்து அங்கதேசாதிபதியாகவும் அமரச் செய்தவன்; என் நண்பன் துரியோதனன்! இப்போது அவனைப் பகைத்துக் கொள்ளச் சொல்லி அம்மாவும் தூது வருகிறார்; நீயும் என் கையில் தாது பார்க்கிறாய்..... எல்லாம் அந்தக் கண்ணன் செய்யும் சூது என்பது எனக்குத் தெரியும்.....

சகாதேவன்:-கோபிக்காதேயண்ணர் உன்னைப் போன்ற உத்தமர்கள் துரியோதனன் அணியில் இருக்கக் கூடாது- எத்தனையோ கொடையளித்த கை உனது கை- இப்போது எங்களுக்கு அதுதான் "நம்பிக்கை"! அதை நீட்டு அண்ணா!

கர்ணன்:-சகாதேவா!போதும் உன் புகழாரம்! நீ தர்மன் மீது கொண்டுள்ள விசுவாசத்தின் அளவும் எனக்குத் தெரியும்

சகாதேவன்:- தர்மண்ணாவை பேசச் சொல்லவா?

கர்ணன்:-வேண்டாம், வேணடாம்-உங்கள் ஐவருக்கும் சேர்த்துத் தான் அம்மா வந்து அழுது புலம்பிக் கெஞ்சிக்கூத்தாடி விட்டுப் போய் விட்டாரே! என் முடிவில் மாற்றமே இல்லை! நான் ஒரு தடவை சொன்னால்....எத்தனை தடவை சொன்னதாக அர்த்தம் தெரியுமா?.....

சகாதேவன்:- தெரியும் அண்ணா- ஒரு நிமிஷம் பாஞ்சாலி பேசணுமாம்-

கர்ணன்:-யார்?....

சகாதேவன்:-அதான்; திரௌபதி-

கர்ணன்:- அதெல்லாம் வேண்டாம்- என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை- (அதற்குள் செல்போனில் பெண் குரல் கேட்கிறது-)

பாஞ்சாலி:- ஹலோ - நான்தான் பாஞ்சாலி பேசுகிறேன்...

கர்ணன்:- நான் யாருடனும் பேசத் தயாராக இல்லை...

பாஞ்சாலி:- அய்வருக்கும் தேவி அழியாத பத்தினியெனறால்; நீங்கள் பேச மறுப்பது நியாயம்- நான் உண்மையில் மானசீகமாக கர்ணனாகிய தங்களுக்கும் மனைவியாக எண்ணி இருப்பவள்-நீங்கள் விரும்பாவிட்டாலும் நான் அப்படி விரும்பியவள்-

கர்ணன்:- என்ன புதிர் போடுகிறாய் பாஞ்சாலி?

பாஞ்சாலி:- நடந்ததைச் சொல்லி விடுகிறேன்; கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள்-

கர்ணன்:- எல்லாம் விபரீதமாகத் தெரிகிறது- உம்; சொல்லும்மா...

பாஞ்சாலி:- பாண்டவர்களுடன் வன வாசம் செய்து வன வனாந்திரங்களைக் கடந்து சென்றபோது- தஞ்சை மண்டலத்தில் "விழுந்த மாவடி" என்ற ஊரில் ஒரு பெரிய மாமரம்! மரத்தடியில் ஒரு முனிவர் கடுந்தவம் செய்து கொண்டிருக்கிறார்- அந்த மாமரத்தில் ஒரே ஒரு குண்டு மாம்பழம்- அதை அருந்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். உடனே என் கணவர்களில் ஒருவரான அர்ச்சுனன் அம்பு எய்து அந்த மாம்பழத்தைக் கீழே விழச் செய்தார்.

சப்தம் கேட்டு தவமிருந்த முனிவர் விழித்துக் கொண்டு "ஆகா! நான் எப்போதும் சிரஞ்சீவியாக வாழ்வதற்கு அந்த மாம்பழத்தைச் சாப்பிடக் காத்திருக்கிறேன்; அதற்குள் அதை அடித்துக் கீழே வீழ்த்திவிட்டீர்கள்- இதோ பிடியுங்கள் சாபம்! மாங்கனி விழுந்தது போல் உங்கள் தலைகளும் வெட்டுண்டு கீழே விழட்டும்!" என்று சாபமளித்துக் கூக்குரலிட்டார்!

நாங்கள் பயந்து நடுங்கி, பரந்தாமனை வேண்டி அழைத்து உயிர் பிச்சை கேட்டோம் - பரந்தாமன் சொன்னார் - "நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் ஒளித்து வைத்திருக்கும் ஓர் உண்மையைச் சொன்னால் அந்த மாங்கனி ஒவ்வொரு உண்மைக்குமாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து சென்று- மாமரக்கிளையில் ஒட்டிக் கொள்ளும். அப்படிச் செய்துவிட்டால் முனிவர் சாபத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வார்" என்று கூறினார்.

உடனே தர்மர், அவர் மனத்தில் மறைத்திருந்த ஓர் உண்மையைச் சொல்லவே, "மாங்கனி" - கொஞ்ச தூரம் மேலே உயர்ந்தது- இப்படிப் பாண்டவர் ஐவரும் ஆளுக்கொரு உண்மையைச் சொன்னவுடன், அந்தப் பழம், மரக்கிளைக்கு அருகே போய் நின்றுவிட்டது. கிளையில் அது ஒட்டிக் கொள்வதற்கு ஓர் உண்மைதான் பாக்கி!

கர்ணன்:- அந்த உண்மையை யார் சொல்ல வேண்டும்?

பாஞ்சாலி:- நான்தான் சொல்ல வேண்டும்- நான் மறைத்திருந்த உண்மையென்று ஒன்றைச் சொல்லியும் கூட மாங்கனி மரக்கிளையில் போய் ஒட்டவில்லை. அப்படியே நின்றது நின்றபடி இருந்தது-

அப்போது பரந்தாமன் கிருஷ்ணன் கோபத்துடன் என்னை நோக்கி; "பாஞ்சாலீ! எதையோ மறைத்துப் பொய் கூறுகிறாய்- நீ அந்த உண்மையைச் சொல்லாவிட்டால்; உங்கள் அனைவரது தலைகளுக்கும் ஆபத்து" என்று மிரட்டினார்.

அப்போது மிகவும் பயந்து போன நான் உண்மையாகவே உண்மையைச் சொல்லி விட்டேன்... மாங்கனியும் மரத்தில் போய் ஒட்டிக் கொண்டது-மகாமுனி சாபத்திலிருந்து நாங்களும் உயிர் பிழைத்தோம்... கர்ண பிரபூ! அப்படி நான் மறைத்திருந்த அந்த உண்மை என்ன தெரியுமா?

கர்ணன்:-என்ன அது? சொன்னால்தானே தெரியும்.....

பாஞ்சாலி:- பஞ்ச பாண்டவர் ஐந்து பேரே அன்னியில் எனக்கு ஆறாவதாகக் கர்ணன் மீதும் காதல் உண்டு என்பதே அந்த உண்மை.....

கர்ணன்:-(முகத்தை வெறுப்புடன் சுளித்துக் கொண்டு) ஓ!அந்த ஊர்ப் பெயர் "விழுந்தெழுந்த மாவடி" என்றிருந்து; சுருக்கமாக "விழுந்த மாவடி" என்று ஆன கதை இதுதானா? சபாஷ்! நல்ல கதை! நல்ல உண்மை!

பாஞ்சாலி:- இப்போதும் கேட்கிறேன்- உண்மை ஜெயிக்குமா?

கர்ணன்:-உண்மை ஜெயிக்கும்-அதற்கு உதாரணத்தை இங்கேயே இப்போதே கண்டிருக்கிறோம்- ஆனால் பாஞ்சாலியின் ஆசை ஜெயிக்காது- ஜெயிக்கவே ஜெயிக்காது!

பாஞ்சாலி:-சரி; என் ஆசை ஜெயிக்க வேண்டாம்-இந்தப் பாரதப் போரிலாவது, நீங்கள், எங்கள் பக்கம் வந்து உதவலாமே! ஏனென்றால் வென்றிடப் போவது நாங்கள்தான்....

கர்ணன்:-பாஞ்சாலியின் நம்பிககையைப் பாராட்டுகிறேன்-ஆனால் ஒன்று வெற்றியினால் மட்டும் ஒருவரின் பெயரும், புகழும் நிலைத்திருப்பதில்லை-மகாபாரத யுத்தம் நடைபெற்று முடிந்து-குருட்சேத்திரத்தில் பெருக்கெடுக்கப் போகும் குருதிப்புனலில் இரு தரப்பினரும் மிதந்து- இந்தப் போராட்டம் பற்றிய கதை மட்டும் வாழ்கிற போது -

மனைவியை பணயம் வைத்து சூதாடியவன் தர்மன் என்பதும்- சாவு சதிராடும் போர்க்களத்தில் கூட கொடை கொடுத்த வள்ளல் கர்ணன் என்பதும் அழியாத அத்தியாயங்களாக இருக்கும்...


(பேசிக் கொண்டே கர்ணன் செல்போனை நிறுத்தி விடுகிறான்-

பாஞ்சாலியும்- அவளது ஐந்து கணவர்களும் "அலோ"- "அலோ" என்றவாறு செல்போனை அழுத்திப் பார்த்து- பயனின்றி உதட்டைப் பிதுக்கியவாறு நிற்கின்றனர்)

(மீண்டும் "செல்போன்" ஒலிக்கிறது- பாஞ்சாலியும் பாண்டவர்களும் ஆவலுடன் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி செல்போனைத் தங்கள் காதுகளில் வைத்துக் கொண்டு கேட்கிறார்கள் - செல்போனில் கர்ணனின் குரல்கேட்கிறது)

கர்ணன்:- ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்- பாஞ்சாலியும் பாண்டவர்களும் கேட்டுக் கொள்ளுங்கள்- அன்று 'பாரதப் போர்' நடந்ததை இப் போது நினைவில் வைத்துக் கொண்டு ஏமாந்து போகாதீர்கள்- அந்தப் போரில் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் ஜெயித்து விட்டீர்கள்- அது வேறு யுகம்- திரேதா யுகமோ, துவாபர யுகமோ ஏதோ ஒரு யுகம்; இது உங்கள் பாஷைப்படி "கலியுகம்"- எங்கள் கருத்துப்படி ஜனநாயக யுகம்! இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும் பாஞ்சாலியின் பசப்புகளுக்கும் இடமில்லை- அவை எடுபடாது- வெற்றி எங்களுக்குத் தான் என்பதை உங்கள் "ஆருடப்புலி" சகாதேவனிடம் சொல்லி அதையும்.. கணித்து வைக்கச் சொல்லுங்கள்- அவன் 'தூது' தோற்றுவிட்டதற்காக என் ஆழ்ந்த அனுதாபத்தை அவனுக்கு தெரிவியுங்கள்...

(அது கேட்டு பாஞ்சாலியும் பாண்டவர்களும் ஒரே குரலில் "ஆ" என்று அலறுகிறார்கள்)

(கர்ணன் "கலகல"வென சிரிக்கிறான்)

உடன்பிறப்பே, அந்தச் சிரிப்பொலியில் நானும் கண்விழித்துக்கொண்டேன். கண்டது பாரதக் கதையின் அடிப்படையிலான கனவு என்றுணர்ந்ததுடன் அந்தக் கனவின் முடிவு, களிப்பூட்டுவதாக அமைந்ததால்; அதனை உனக்கும் சொன்னேன். நீயும் விழித்துக் கொள்; விடியப் போகிறது!


இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.

---------------------------------------------------------

அடே யப்பா! இந்தக் கதையின் 'புனைவுக்கு' மிகச் சிறப்பாக உரை எழுதுபவருக்கு (தில்லியிலிருந்து) அஸ்தினாபுரம் செல்ல பேருந்துச் சீட்டு எடுத்துத் தரப்படும்!! :)

7 comments:

Muthu said...

:-)

Anonymous said...

ஆமா இதில கண்ணன் யாரு? சகாதேவன் யாரு? குறிப்பா பசப்புக்காரி பாஞ்சாலி யார்? ஒரே கொழப்பமா இருக்கு :-)

நண்பன் said...

தமிழக அரசியலை இப்படி புட்டு புட்டு வைத்திருக்கிறாரே!!!

வைகோவும், காளிமுத்துவும், ஜெய்ய்ம் தான் கருணாநிதி சொன்ன புராணத்து நாயகர்கள்!!!

நியோ / neo said...

நண்பன், முத்து மற்றும் அனானி ஆகியோருக்கு நன்றிகள் :)

நியோ / neo said...

அன்பு குமரன்!

சில வாரங்களாக தமிழ்மணம் பக்கம் வரவில்லையாதலால் - நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் பங்கு பெற இயலவில்லை! எனினும் உங்கள் அணிக்கு என் அஞ்சல் வாக்கு உண்டு! :)

Anonymous said...

Karnan-Dr.Ramadoss
Panchali-Jayalalitha
Sagadevan-Thirumavalavan

Sandhegam theernthadha?

Thiruma thoodhu vantha pinbum,Jayalalitha cell phone moolam thodarbu konda pinbum Ramadoss Kaligner pakkam thaan irukkirar.

ஜயராமன் said...

ஐயோ பாவம், கருணாநிதி. இரவு இரண்டு மணிக்கு பாஞ்சாலியின் பத்தினித்தனத்தில் கனவு வேறு.

அபத்த களஞ்சியம்.

ஆனால், போனால் போகட்டும். தன்னை துரியோதனன் என்றாவது ஒத்துக்கொண்டாரே! பிறர் மனைவியை துகிலுரிக்க ஆசை அந்த துரியோதனனுக்கு. சட்டசபையில் புடவை இழுத்து பழக்கம் இந்த துரியோதனனுக்கு.

அரக்கு மாளிகையில் நயவஞ்சமாக எதிரியை எரிக்க பார்த்தான் துரியோதனன். இங்கே கூண்டோடு எதிர்கட்சிகளை அழிக்க பார்க்கிறாரோ?


குருட்டு அப்பனை வைத்து தான் பின் பக்கமாக ஆட்சி நடத்தினான் துரியோதனன். தன் பிள்ளை பாசத்திற்காக குருடனாகி, ஆட்சிகட்டிலில் பையனை சீராட்டி பார்க்க ஆசைப்படுகிறார் இந்த மூத்த தலைவர்.

பிள்ளை பாசத்தில் அழிந்த திருதராட்டினன் கதை போல இவர் கதை ஆகாமல் இருந்தால் நல்லது.

தி.மு.க (அதான் திருவாரூர் முத்தையா கருணாநிதி) எப்பொழுதும் நல்லாட்சி கொடுக்காது என்பதைதான் இரவு கனவில் சொல்கிறாரோ!

நன்றி