25 January 2007

தல புராணம்

சென்னை போன்ற நகரங்களில் வாழ்பவர்களுக்கு இந்தக் கவிதை புரியும். இதை நான் முதன்முதலாக எழுதி பல ஆண்டுகள் அப்படியே வைத்திருந்தேன்; சில திருத்தங்கட்குப் பின்னர் சில ஆண்டுகள் முன்பு வேறொரு தளத்தில் இட்டேன்.

இப்போது பொன்ஸ் அவர்கள் எழுதிய அரசாங்கம் கவனிக்குமா? - 2 என்ற பதிவில் யானைப் படங்கள் போட்டிருந்ததைப் பார்த்தபோது ஏனோ இந்த என் கவிதை நினைவுக்கு வந்தது!


தல புராணம்

=============

சாக்கடையோர மூத்திரச் சுவரில்
'கர்ப்பக்கிரகம்' அமைந்த பிள்ளையார்
மூக்கு நீளம் முழுதும் நாற்றமேறி...
அவஸ்தையாய் 'நெளிந்தருளி'க் கொண்டிருக்கிறார்

மேலே கூரையில்லா விநாயகருக்கு
தினசரி பால்பழ தேனாபிஷேகம்
இல்லாவிட்டாலும்...
காக்கை எச்சம் கட்டாயம் உண்டு

'மெயின் ரோட்டோரக்' கணேசருக்கு
கம்பிக் கதவில்லை உண்டியலுக்குப் பூட்டுண்டு
பிள்ளையார் ஆண்டியாய்
உண்டியார் பத்திரமாய்

அர்த்தராத்திரியில் 'மன்மத' தேவர்களோடு
காட்சி அரங்கேற்றும் 'பத்து ரூபாய்' இரவுராணிகளின்
இலவச தரிசனம் கண்டுகளிக்கும்
அரசமரத்தடி 'பிரும்மச்சாரி'ப் பிள்ளையார்

கொழுக்கட்டையே பார்த்திராத
'பீ சந்து' முனைப் பிள்ளையாருக்கு
தினசரி இரவில் 'சாராய சதுர்த்தி'
கொண்டாடும் குடிமக்கள்

பரீட்சை மார்க்குகளின் விகிதாசாரப்படி
வேண்டுதலில் கூட்டியோ குறைத்தோ
தேங்காய் உடைக்கப்படும்
பள்ளி(க்கூட)வாசல் பிள்ளையார்

விடலைக்குமரிகள் குளிப்பதை
பார்க்க முடியாதபடி ஆலமர விழுதுகள்
மறைத்திருக்கும்... குளக்கரைக் கணபதி...
உடைமாற்றும்போது சாட்சியாக

கரையுடைத்து வெள்ளம்பெருகி
'அவல் பொரி எலி' யோடு
அடித்துச் செல்லப்பட்ட
ஆற்றங்கரை ஓரப் பிள்ளையார்

தொலைபேசி இணைப்புக்காக வெட்டப்பட்ட
'தூங்கு மூஞ்சி' மரக்கிளை விழுந்து
மூக்குடைந்து போன விநாயகர்
'வலம்புரியா?'...'இடம்புரியா?'

'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'
களவாடப்பட்டு...
காட்சி தரும் - பிளாட்பாரக்
'கோவண' கணேசர்

அழுகல் தேங்காயும் கூழான பழமும்
வாடிப்போன சாமந்தியுமே
விதிக்கப்பட்ட...
'சேரி'ப் பிள்ளையார்

புதுவருஷ உற்சவத் திருவிழாவின்
'வரவு செலவு' கணக்குக்கான அடிதடியில்
இழுத்துப் பூட்டப்பட்டு..
கோயிலில் சிறையிருக்கும்
'காலனி'ப் பிள்ளையார்

பக்தகோடிகளால் கட்டியிழுத்துவரப்பட்டு
பூரண அலங்காரத்தோடும் ஆத்திக கோஷங்களோடும்
'அடி உதை மிதி குத்து வெட்டு' பெற்று
'ஜல சமாதி' - செய்யப்படும்
கடற்கரை விநாயகர்

இப்படியாகத்தானே பல புண்ணியத் தலங்களில்
எழுந்து அருளியிருந்தாலும்...
அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது.

- நியோ.

4 comments:

நியோ / neo said...

இந்தப் பதிவுக்கு நான் தந்த அடைக்குறிப்புகளின் ( Labels) வரிசையை பிளாக்கர் மாற்றிவிட்டது! (Randomizing)

மேலும் 75-80 எழுத்து எண்ணிக்கைக்கு மிகாதபடி அடைக்குறிப்புகள் அமைய வேண்டும் என்று உத்தரவு போட்டபடி என்னை பேஜார் செய்துவிட்டது! :)

எழில் said...

நல்ல கவிதை.
அழகான கவிதை.
ஆழமான கவிதை.

நியோ / neo said...

>>
எழில் said...

நல்ல கவிதை.
அழகான கவிதை.
ஆழமான கவிதை.

Wednesday, January 24, 2007 5:06:00 PM >>

வருகைக்கு நன்றி எழில் அவர்களே! :)

இங்கே வந்து 'பாராட்டி' பின்னூட்டம் போட்டதற்கு - உங்கள் மீது சில பின்னூட்ட ஏவுகணைகளை வீச கைபர்-போலன் கும்பல் வருவார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள்! :)

Anonymous said...

அந்த 'தலபுராண'த்த விட இந்த 'தல புராணம்' நல்லா இருக்கு - உண்மையாவும் இருக்கு! ;)