17 January 2010

தாய் தின்ற மண்ணே!

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலம் எங்கே
சொல்லாடிய அவை எங்கே
வில்லாடிய களம் எங்கே
கல்லாடிய சிலை எங்கே


கயல் விளையாடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி

சிலைவழி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊண்பொதி சோற்றின் தேன்சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறி கொறிப்பதுவோ..
காற்றைக் குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ..

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ...

(தாய் தின்ற மண்ணே...)


நொறுங்கும் உடல்கள்..
பிதுங்கும் உயிர்கள்..
அழுகும் நாடு..
அழுகின்ற அரசன்..


பழம் தின்னும் கிளியோ?
பிணம் தின்னும் கழுகோ?
தூதோ? முன்வினைத் தீதோ?..

களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்துப் போவாயோ..
தங்கமே எம்மைத் தாய்மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போல் மண்ணில் புரண்டிருப்போம்..

ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்

அதுவரை....அதுவரை.....ஓ..


தமிழர் காணும் துயரம் கண்டு
தலை சுற்றும் கோளே அழாதே..
என்றோ ஒருநாள் விடியும் என்று
இரவைச் சுமக்கும் நாளே அழாதே..

நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி
உறையில் தூங்கும் வாளே அழாதே..

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழுகும் யாழே அழாதே...


தாய் தின்ற மண்ணே..
தாய் தின்ற மண்ணே..
இது பிள்ளையின் கதறல்..
ஒரு பேரரசன் புலம்பல்..



*****************************************

எலிக்கறி தின்றவர்களுக்கு இந்த வெதும்பல் புரியும்; "புலிக்கறி" ருசித்தவர்களுக்கு இது பிடிக்காது.

3 comments:

நியோ / neo said...

testing the pinnootta petti

Anonymous said...

dei nee anda shelvragvan madri oru loosada? mental

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in