13 January 2007

'முனைவர் வைரமுத்து'வுக்கு வாழ்த்துக்கள்!



நேற்று முன்தினம் (11/01/2007) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு முனைவர்' (Doctor of Literature honoris causa ) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்கள்! :)

தகுதிவாய்ந்த பெருமகனாருக்கு சீரிய சிறப்புச் செய்யப்பட்டிருக்கிறது. பாராட்டுகிறோம். :)

இத்தருணத்தில் கவிப்ப்பேரரசரின் 'இனம்' என்ற கவிதையை இங்கே தருகிறேன்.


இனம்
-----------------------------

தமிழா

காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா

கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்

பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்

``````````````````

உன்
ஆட்டு மந்தைகளை
வேட்டையாட விட்டுவிட்டாய்

கூடப் பிறந்தோனின்
கோழிக்குஞ்சு திருடுகிறாய்

பிள்ளைபெற்ற பெண்ணை
அடிவயிற்றுச் சுருக்கங்கள்
அடையாளம் சொல்வதுபோல்
நீ
அடிமை புரிந்த
அடையாளம் மாறவில்லை

அன்று-
மதம் வந்தது
நீ
வருணமாகப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாய்ப் பிரிந்தாய்

தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்

````````````````````````

மழைபிலிற்றும் இரவுகளில்
நனையாத திண்ணையை
நாய்க்கு வழங்கிவிட்டு
நனைந்து கிடக்கிறாய்


வெளவால் -
விலங்கா? பறவையா?
விளங்கவில்லை

நீ -
அடிமையா? மனிதனா?
ஆதாரம் இல்லை

மின்சாரம் அறுந்த ராத்திரியில்
மெழுகுவத்தி அழுவதுபோல்
ஓரோர் இரவில்
உனக்காய் அழுகிறேன்

`````````````````````````````````

இந்தியப் பரப்பில்
எந்தமிழ் நாடு
நடந்து பார்த்தால்
நான்கு சதம்

இந்திய மக்களில்
எம்மருந்தமிழர்
ஏழுபுள்ளி ஐந்து சதம்

அன்று
பாராட்சி செய்த இனம்
இன்று
பரத கண்டத்தின்
ஊராட்சி ஒன்றியம்

பிற்காலச் சுந்தரபாண்டியன்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்

அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்

தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்

அன்று தொலைத்த முகம்தான்
இன்றும் காணக் கிடைக்கவில்லை

`````````````````````````


தொலைக்காட்சி விளம்பரங்கள்
துருவிப் பார்க்கிறேன்

ஒரு முகமேனும்
தமிழ் முகம் இல்லை

ஒரு வணிகமேனும்
தமிழ் வணிகம் இல்லை

சுவர்பார்த்துத் தலைவாரும்
அடுக்குமாடி வீடுகளில்
பத்துக்கு ஏழு
தமிழர் இல்லை

விமானம் ஏறினால்
தமிழ்முகம் தேடுவேன்

ஏழைவீட்டுப் பாயாசத்தில்
எங்கோ அகப்படும் முந்திரிமாதிரி
இரண்டோ மூன்றோ
இருப்பினும் இருக்கும்

ஏனிந்தப் பின்னடைவு?

ஆடை ஆயுதம்
சுமையென்றானால்
அழுக்கும் பொதிகளும்
செல்வமென்றானால்
எந்த இனத்தின் யாத்திரை தொடரும்?

புதுமைகொள் தமிழா
புழுதி கழுவு

உலக நீரோட்டத்தில்
கரைந்துவிடாமல்
கலக்கப்பழகு

அடுத்த நூற்றாண்டின் *
அந்தி நேரத்தில்
மூளை தவிர எல்லாம்
செயற்கையாய்க் கிடைக்கும்

ஆண்டுக்கொருமுறை
முகம் மாற்றலாம்

மரத்தின் திசுக்களில்
மனிதன் வாழ்வான்

எண்கள் இட்ட்
இருதயம் கிடைக்கும்

கணவனுக்கு மனைவி
செவ்வாயிலிருந்து
செலவுக்கனுப்புவாள்

உணவு மாறும்
உடைகள் மாறும்
எல்லாம் மாறும் எல்லாம் மாறும்

இன அடையாளம் மொழியாய் மிஞ்சும்
அடையாளம் இழக்காதே

மேற்கே விஞ்ஞானம்
பொருள் கண்டறிந்தது
போன நூற்றாண்டு

அதற்கு நீ
சொல் கண்டறிந்தது
இந்த நூற்றாண்டு

சொல்?
என்று நீ
சொல்லை விடுத்துப்
பொருள் கண்டறிவாய்?

அறி
அன்றுதான்

நீ
அறியப்படுவாய்.


- "தமிழுக்கு நிறம் உண்டு" தொகுதியிலிருந்து


* => இந்தக் கவிதை 1997 ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது

3 comments:

Anonymous said...

ithellam oru posta?

Thamizhan said...

அழகான வார்த்தைகள்
ஆழமான்க் கருத்துக்கள்
தமிழ் படி்த்துப் பயனென்ன
தவறான்க் கேள்வியென்றே
தரணிக்கே உணர்த்துகின்றாய்!
அடித்தளம் கொள்கையென்றே
படித்தவரும் உணருகின்றார்!
எழுதாதத் தலைப்பில்லை
ஏந்துகின்ற தலைவர்க்கு
ஏற்றமிகு புகழ்மாலை
போற்றுகின்ற் தமிழர்க்குப்
பொன்னெழுத்துப் பெட்டகங்கள்
வாழ்த்திடுவோம் பட்டமது
பெற்றது ஒரு தமிழ்ப்பெருமை!
பெரியாரின் கருத்திசைத்தாய்
பல கால்ம் வாழ்ந்திடுவாய்!

நியோ / neo said...

வருகைக்கும் அழகான கவிதைநடை வாழ்த்துக்கும் நன்றி நண்பர் தமிழன்! :)