22 April 2006

எலிசபெத்தின் காதல்!

சில வருடங்கட்கு முன்பு எலிசபெத் பாரெட் ப்ரவுனிங்(Elizabeth Barrett Browning) என்கிற பிரபலமான ஆங்கிலப் பெண் கவிதாயினியின் 'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' (Sonnets from the Portuguese) என்கிற தொகுப்பைப் படிக்க நேர்ந்தது.

விக்டோரியன் காலகட்டத்தில் வாழ்ந்த மாபெரும் பெண் கவிஞராக எலிசபெத் மதிக்கப்படுகிறார். அவரை விடவும் வயதில் இளையவரான ராபர்ட் ப்ரவுனிங் (Robert Browning) என்கிற இன்னொரு பிரபலமான கவிஞரை காதலித்து மணந்தவர் எலிசபெத்.

'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' என்கிற கவிதைத் தொகுப்பே எலிசபெத் தன் ஆருயிர்க் காதலனை எண்ணி உருகி உருகிப் பாடியதுதான்! படிப்பவர்களையும் உருக வைப்பது; உயிர்ப்புள்ள கவிதைகள் அவை.

அந்தத் தொகுப்பின் 43-ஆம் பாடலை தமிழில் மொழி ஆக்கம் செய்து பார்க்கும் ஆசை வந்தது! இதைச் செய்தும் இப்போது சில காலங்கள் ஆகின்றன; அந்த மொழி ஆக்கக் கவிதையை (முயற்சியை) இங்கே தருகிறேன்.

எலிசபெத்தின் 'மொழியாளுமை' எளிய சொற்களின் மூலம் வலிய வளமான படிமங்களைக் உருவாக்க வல்லது. புலனறிவு கடந்த இறைமைத் தேடலின் 'ஆன்மா' இக்கவிதைகளில் 'சூல்' கொண்டுள்ளது என்பர். நான் மொழியாக்கத்திற்கு நமது புதுக்கவிதை வடிவத்தை முயன்று பார்த்திருக்கிறேன். இனி மொழியாக்கக் கவிதை :


'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' - 43


உன் மீதான என் காதலை எப்படி விரித்துரைப்பேன்?
என் காதலென்னும் வேகப்புரவி...
உணர்வென்னும் சமவெளியில் புரண்டு சிலிர்க்காமல்
மொழியென்னும் தொழுவத்தில் அடைபடச் சம்மதிக்குமா?!

விம்மிப் புடைத்து நிற்கும் என் ஆன்மாவின் ஒவ்வொரு அணுக்களிலும்
எல்லையற்ற உன் நினைவுகள் வியாபித்திருக்கின்றன...
பகலும் இரவும் காதலால் என்னை ஒளியூட்டும் உன் பெயரென்னும் விண்மீன்!

கட்டற்ற காற்றாய் என் காதல் வந்துன் சுவாசமாகட்டும்
புனிதமான என் நேசம் கார்மேகமாய் சூல் கொண்டு
உன்னைக்கண்டதும் மழைக்கத்தொடங்குகின்றன
என் பழைய காயங்கள் உனைக் கண்டதும் இமை மூடுகின்றன

உன் மீதான காதல்
இழந்துபோன என் பழைய புதையல்களை மீட்டெடுத்துவிட்டது!
இறந்துபோன நம்பிக்கைகளுக்கும் 'மீட்சி' தந்தது!

என் மூச்சின் காற்றாய் நீ!
என் புன்னகையின் ஆன்மாவாய் நீ!
என் கண்ணீரின் ஜீவ ஊற்றாய் நீ!
என் வாழ்க்கையின் மூல வேராய் நீ.. நீதான் இருக்கின்றாய்!
என் 'மெய்' - 'பொய்'யாகிப் போன பின்னும்
பிரபஞ்சத்தின் கைகளால் உனைத் தழுவிகொள்வேன் -
இன்னும் இறுக்கமாய்!


********************************


பின்வருவது எலசபெத்தின் மூலக் கவிதை:

Sonnets from the Portuguese: 43

How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of Being and ideal Grace.
I love thee to the level of every day's
Most quiet need, by sun and candlelight.
I love thee freely, as men strive for Right;
I love thee purely, as they turn from Praise.
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood's faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints, -- I love thee with the breath,
Smiles, tears, of all my life! -- and, if God choose,
I shall but love thee better after death.

- Elizabeth Barrett Browning

5 comments:

neo said...

எலிசபெத் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு இங்கே சொடுக்கிப் படிக்கலாம்

Sivabalan said...

Good one!!!

neo said...

உங்கள் கருத்துக்கு நன்றி சிவபாலன். :)

Srimangai(K.Sudhakar) said...

Nice to see your words "again"! Your powerful transliteration (?) is at best " simple eloquence".Just reminescing the old threads in some other domains... :)
My tamil fonts are not working..
Keep your literary works alive in blogs.
Anpudan
K.Sudhakar

neo said...

திருமங்கை!

உங்கள் அன்பான கருத்துக்கு என் நன்றி! தொடர்ந்து நீங்கள் விரும்புவது போல கவிதை ரசனைக்கான ஒரு தளத்தை மீட்டெடுக்கத்தான் வேண்டும்! பார்ப்போம்! உங்கள் படைப்புகளைப் படிக்க ஆவலோடு உள்ளேன். முடியும்போதெல்லாம் படிக்கிறேன்/எழுதுகிறேன் - நன்றி! :)